பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுகிறது.
குறிப்பிட்ட மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்ததுடன் எதிர்க்கட்சியினரை இஸ்லாமிய மதத்தின் ஆதரவாளர்களாக மோடி சித்தரித்துள்ளார். பிரச்சாரத்தில் மதத்தை பயன்படுத்தியதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், பிரதமர் மோடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.