மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பாஜக அரசுக்கு எதிராக காட்டமாக கருத்துக்களை முன்வைத்தார். “நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வருகிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை கைது செய்ததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்தால் யாரையும் கைது செய்வோம் என்று காட்ட நினைக்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக இதையல்லாம் செய்கிறீர்கள்.
ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் திருடர்கள் அனைவரும் அவரது கட்சியில் தான் உள்ளனர். ஊழல் செய்தவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு துணை முதல்வராகவும், அமைச்சராகவும் ஆக்கினார்கள். உண்மையில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டுமானால் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைப்பார்கள். 75 வயதில் பாஜகவில் ஓய்வு கொடுத்துவிடுவார்கள் என்றால் அமித் ஷாவை பிரதமராக்க மோடி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.” என அவர் பேசினார்.