தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி முத்துக்குமார் (37), இவரது மனைவி சாந்தி (35), இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை முத்துக்குமார் கடல் தொழிலுக்கு சென்று விட்டார்.
இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். தாய் சாந்தி மகளிர் குழுவில் பணம் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். காய்ச்சல் காரணமாக வீட்டில் இருந்த மூன்றாவது மகன் சிறுவன் அஸ்வின் குமார் (7) வேம்பார் கடலோர காவல் நிலையம் எதிரே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
சூரன்குடி போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிமாறன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வேம்பார் மிக்கேல் நகரைச் சேர்ந்த அந்தோணி கென்னடி என்பவரது மகன் தாமஸ் அற்புத ரகசியம் (19) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் வேம்பார் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த தாமஸ் அற்புத ரகசியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்ததும் சம்பவ தினத்தன்று கஞ்சா போதை தலைக்கேரி முத்துக்குமாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனிமையில் இருந்த சிறுவன் அஸ்வின் குமாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த போது அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவன் அஸ்வின்குமாரை போதையில் கீழே தள்ளி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்திருப்பது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தாமஸ் அற்புத ரகசியத்தை போக்சோ சட்டத்தில் சூரன்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான தனிப்படை போலீசார் தாமஸ் அற்புத ரகசியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைத்தனர்.