காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம். கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக பணியாற்றி வந்த இவருக்கு, முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதனால், வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஆனால், இரண்டாவது திருமணமும் சரியாக அமையாததால், தம்பதியினர் இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்றும், சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும் இடையே, பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த வேண்டா, அம்மிக்கல்லை எடுத்து, சந்தானத்தின் தலை மீது போட்டு, கொலை செய்துள்ளார்.
இருப்பினும், ஆத்திரம் தீராத அவர், கத்தியை எடுத்து, சந்தானத்தின் பிறப்புறுப்பை அறுத்து வீசியுள்ளார். இதையடுத்து, கொலை நடந்த சம்பவத்தையும், தனது குழந்தையை பார்த்துக் கொள் என்று கூறியும், தம்பிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.