நயன்தாரா இரட்டை குழந்தைக்கு தாயான விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர், விதிகளை மீறி குழந்தைக்கு தாயானரா போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் விதிகளை மீறினாரா? வாடகைத் தாய் சட்டம் என்ன சொல்கிறது உள்ளிட்ட விஷயங்களை தற்போது காணலாம்..
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஜோடியினரின், விந்தனுவும், கருமூட்டையும், வாடகைத் தாயின் கருப்பையில் இடப்பட்டு கருவூட்டப்படும். பின்னர், 10 மாதங்கள் கழித்து, வாடகைத் தாய், அந்த குழந்தையை பெற்றெடுப்பார். சில சமயங்களில் ஆணோ, பெண்ணோ குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும்.
அந்த சமயத்தில், வேறொரு ஆணின் விந்தனுவோ, வேறொரு பெண்ணின் கருமுட்டையோ வாடகைத் தாயின் கருப்பையில் இடப்பட்டு, கருவூட்டப்படும். இதுதான் வாடகைத்தாய் முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம், குழந்தை பெற்றுக்கொள்ள பல்வேறு சட்டவிதிகள் உள்ளது. அந்த விதிகள் பின்வருமாறு உள்ளது.
1. ‘குழந்தை பெறவே முடியாது என்ற சூழ்நிலையில் தான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற வேண்டும். பணம் இருக்கிறது என்ற காரணத்துக்காகவெல்லாம், இந்த முறையை பின்பற்றக்கூடாது.
2. வாடகை தாய் முறையின் மூலம், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஜோடியினர், திருமணமாகி 5 வருடங்கள் வரை ஒன்றாக வாழ்ந்திருக்க வேண்டும்.
3. மனைவிக்கு 25 வயதில் இருந்து 50 வயது வரை இருக்கு வேண்டும். கணவனுக்கு 26 வயதில் இருந்து 55 வயது வரை இருக்க வேண்டும்.
4. இவ்வாறு குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் ஜோடியினர், ஏற்கனவே குழந்தை பெற்றிருக்கக் கூடாது. ஏற்கனவே பெற்ற குழந்தை, மாற்றுத்திறனாளியாகவோ, அகச்சிக்கல் உள்ளவராகவோ, உயிருக்கு சிக்கல் இருக்கும் குழந்தையாகவோ இருந்தால், வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
5. வாடகைத் தாய் ஜோடியின் நெருங்கிய உறவினராகவும், திருமணமாகியவராகவும், இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி குழந்தைப் பெற்றுக்கொண்டால், 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். திருமணமாகி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதியை நயன்தாரா மீறியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த சட்டத்தை மீறி அவர் குழந்தை பெற்றுக்கொண்டிருப்பதாக கூறபடுகிறது.
எனவே, அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வெளிநாட்டில் அவர் குழந்தை பெற்றிருந்தால், அந்த சட்டம் எவ்வாறு பின்பற்றப்படும் என்பது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகளே அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தால் தான், இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்..