மகாராஷ்டிரா மாநிலம் வாசாய் பகுதியை சேர்ந்தவர் ரோஹித் யாதவ். இவரும், ஆர்த்தி என்ற பெண்ணும், கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிஞ்பாடா என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில், இவர்கள் இரண்டு பேரும் இன்று சந்தித்துள்ளனர்.
அப்போது, தனது கையில் இருந்த ஸ்பேனரை வைத்து, அந்த பெண்ணின் தலை, மார்பு ஆகியவற்றின் மீது, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன ஆர்த்தி, மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இருப்பினும், “ஏன் இப்படி செய்தாய்.. எனக்கு ஏன் இப்படி செய்தாய்” என்று கூறிக் கொண்டே, அந்த பெண்ணை தொடர்ச்சியாக அடித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரோஹித் யாதவை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரோஹித் உடனான காதலை அந்த பெண் முறித்துக் கொண்டதே, இந்த கொலைக்கு காரணம் என்று தெரியவந்தது. இதுதொடர்பான இதயத்தை பதற வைக்கும் வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.