உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழக சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 30 பேரும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளம் காரணமாக, இவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வழியில் ஆதிகைலாஷிலிருந்து 18 கி.மீ.தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ஒரு ஆசிரமப் பகுதியில் 30 பேரும் தங்கினர். நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால், கடந்த 6 நாட்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மேலும், அந்தப் பகுதியில் போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி உள்ளிட்டவை இல்லாததால், 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் வசந்தா தம்பதியினர், தனது மகன் ராஜனை நேற்று செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலறிந்த மாநில வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News