ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரி பகுதியில், தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில், கேப்டன் சுபம் குப்தா, கேப்டன் எம்.வி.பிரஞ்சல், ஹாவில்டர் அப்துல் மஜித், லேன்ஸ் நாயக், சச்சின் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். மேலும், லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளும், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அமைச்சர் யோகேந்திரா உபத்யாய், கேப்டன் சுபம் குப்தாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அரசு கொடுத்த நிவாரண தொகையை , சுபம் குப்தாவின் தாயிடம் கொடுக்க முயன்றார். ஆனால், மகன் உயிரிழந்த துக்கம் தாளாமல், அந்த பெண் கதறி அழுதுக் கொண்டிருந்தார்.
இதனைக் கவனிக்காத யோகேந்திரா உத்யாய், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பெரும் விமர்சனத்தை கிளப்பியது.
அந்த பெண்ணுக்கு ஆறுதல் அளிப்பதற்கு பதில், புகைப்படத்தை எடுத்து, பப்ளிசிட்டி பெற முயற்சிக்கிறார் அமைச்சர் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது, இந்த விமர்சனங்களுக்கு, அமைச்சர் யோகேந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறிய விளக்கம் பின்வருமாறு:-
“நானும், இன்னொரு அமைச்சரும், காசோலையை வழங்குவதற்காக தான் அங்கு சென்றிருந்தோம். கேப்டன் சுபம் குப்தாவின் அம்மாவை, அவரது குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்தனர்.
சுபம் குப்தாவின் அம்மா, தேற்றவே முடியாத நிலையில் இருந்தார். தனது மகனை மீண்டும் கொண்டு வந்துவிடுங்கள் என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதுதான் அங்கு நடந்தது. இந்த மாதிரியான விஷயங்களை வைத்து அரசியல் செய்வது, மிகவும் அசிங்கமான ஒரு மனப்பான்மை”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.