உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விழா குறித்து கடந்த வாரம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோயில் திறப்புக்கு நாங்கள் எதிரி அல்ல, ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்தை பாஜகவினர் பூதகரமாக்கினார். இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு, “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள். ராமர் கோயிலை எதிர்த்து, சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்.” என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.