சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.