சேலம் மாவட்டம் வாழப்பாடியில், யூடியூபில் பிரபலமாவதற்காக, சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேய் வேடமிட்டு பொதுமக்கள் மத்தியில் உலாவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நேற்று (ஆக30) மாலை 5 மணி அளவில், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு படம் வரைந்து அணிந்து கொண்டு, பேய் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து உலாவினார்.
இதனால் பேருந்துக்காக காத்திருந்த பெண்களும், குழந்தைகளும் அலறினர். யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக பேய் வேடமிட்டு உலாவியதாக தெரியவந்தது.
மேலும், அந்த இளைஞர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.