திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டின் சுண்ணாம்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்துவின் தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி, மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.