புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்த விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரியைச் முத்தியால்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2-ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முத்தியால்பேட்டை போலீசார் பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு பதிவு செய்து, சோலை நகர் கருணாஸ் (19), விவேகானந்தன் (57) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மே மாதம் 6 ஆம் தேதி 80 சாட்சிகளுடன், 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு குற்றவாளிகளையும் முதல்முறையாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் இன்று (செப்.16) சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிறைக் காவலர்கள் விவேகானந்தன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.