மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்த சென்ற கணவர்: தடுமாறி கீழே விழுந்து பலி!

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் நகர காவல் நிலையம் அருகில் கிழக்கு குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44), கூலித்தொழிலாளியான இவரது மனைவி புவனேஸ்வரி (40), டெய்லரான இவர் வீட்டிலேயே துணி தைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு நவீன்குமார் (22), லோகேஷ் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தாருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வந்தவர் மாலை வீட்டில் மது அருந்தும் போது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்துவதற்காக வெங்கடேசன் சென்றுள்ளார்.

அப்போது மது போதையில் தவறி கீழே விழுந்தவர் தான் வைத்திருந்த உடைந்த பாட்டில் கழுத்துப் பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவர் உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News