சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜீ. தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராக வேலை பார்த்து வரும் இவர், சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், விவாகரத்து செய்துக் கொள்ளும் முடிவை சாந்தி எடுத்தார். அதன்படி, வழக்கு தொடர்ந்த அவருக்கு, சட்டப்படி விவாகரத்து வழங்கப்பட்டது. மேலும், மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் ராஜீக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், அந்த தொகையை சரியாக செலுத்தாமல், அவர் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து, சாந்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடியதில், ரூ.2. 18 லட்சத்தை ராஜீ உடனே கட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று நீதிமன்றத்திற்கு வந்த ராஜீ, தான் கட்ட வேண்டிய ரூ.2.18 லட்சத்தை, 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி, நீதிமன்றத்தில் சமர்பித்தார். இரண்டு மூட்டைகளில் வந்து இறங்கிய அந்த பணத்தால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.