குஜராத்தில் போலி சுங்க சாவடி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில், போலி சுங்க சாவடி அமைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடம், அரசின் சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட, 50 சதவிகிதம் குறைவாகக் கட்டணம் வசூலித்து வந்தது அந்தக் கும்பல். பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதால், லாரி ஓட்டுநர்களும் போலி சுங்கச் சாவடி வழியாகவே செல்ல ஆரம்பித்தனர்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் போலியான அரசு அலுவலகத்தை நிறுவி, அதை மூன்று ஆண்டுகளாக நடத்தி, 4 கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் தற்போது போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.