ஜம்மு-காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் (24 தொகுதிகள் – 61.38 சதவீதம்), கடந்த 25-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் (26 தொகுதிகள் – 57.31 சதவீதம்) நடைபெற்றன.

இதையடுத்து மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்திற்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் 40 தொகுதிகளில், 24 தொகுதிகள் ஜம்மு – பகுதியிலும், 16 தொகுதிகள் காஷ்மீர் பகுதியிலும் உள்ளன. இறுதிக் கட்டத் தேர்தலில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி-தோல்வியை 39.18 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

RELATED ARTICLES

Recent News