நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது. சமையல் தேவைக்கு தக்காளி என்பது அத்தியாவசியமாக உள்ள நிலையில் வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை அதிகரித்தே வந்தது. விவசாயிகளுக்கும் ‘ஜாக்பாட்’ அடித்தது போன்று, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை திருடி செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சில விவசாயிகள் இரவு முழுவதும் விழித்திருந்து விளைநிலத்தில் பயிடப்பட்டுள்ள தக்காளிகளை பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் நகர் வலுஜா கிராமத்தை சேர்ந்த விவசாயி சரத் ரவெட் தன் விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். விளைநிலத்தில் பயிடப்பட்டுள்ள தக்காளியை இரவு நேரத்தில் சிலர் திருடி செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து தக்காளி திருட்டை தடுக்க எண்ணிய விவசாயி சரத் ரவெட் 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தன் விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் மூலம் விளைநிலத்தை கண்காணிப்பதாகவும் இதன் மூலம் தக்காளி திருட்டு தடுக்கப்படுவதாகவும் விவசாயி சரத் தெரிவித்துள்ளார்.