மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் செல்லும் 95 X அரசு பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இவர் ஓஎம்ஆர் கொட்டிவாக்கம் ஒய்எம்சி மைதானத்திற்கு எதிரே சரக்கு வாகனத்தை முந்தி செல்லும்போது மெட்ரோ படிக்காக போடப்பட்டிருந்த தடுப்பில் மோதி பேருந்தின் முன் பக்கம் முழுமையாக நொறுங்கியது.
பின்னர் பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் சரவணனிடம் பேச்சுக் கொடுக்கும் போது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் பேருந்து விட்டு அவரை இறங்க கூறியும் அவர் இறங்காததால் பொதுமக்கள் தர்மடி கொடுத்து பேருந்தில் இருந்து இறக்கி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த துரைப்பாக்கம் போக்குவரத்துக் காவல் துறையினர் அவரை பரிசோதித்து அவர் மது அருந்தி இருப்பது உறுதியானதை அடுத்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு வந்த கிண்டி புலனாய்வு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர்.
இது போன்ற ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.