டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ் (39) என்பவர் நிறுவினார். பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.
டெலிகிராம் ஆப்பை மேம்படுத்தாமல் பணமோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள், ஆபாச மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக இருந்தது போன்ற புகார்களினால் பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், அஜெர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆனால் அவரது கைது விவரம் குறித்து பிரான்ஸ் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ரஷ்யா, உக்ரைன் போரின் போது அதிகாரப்பூர்வமற்ற, இருநாடுகளின் மோதல் பற்றியும், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தவறான செய்திகளை வெளியிடும் முக்கிய மையமாக டெலிகிராம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.