மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி 18-வது மக்களவை முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. ஜூன் 27-ஆம் தேதி அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர். அக்னிபாதை திட்டம் சார்ந்தும் தனது கருத்துகளை ராகுல் சொல்லி இருந்தார். அதோடு சிறுபான்மையினர் குறித்தும் பேசி இருந்தார். நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, அதானி மற்றும் அம்பானி குறித்தும் பேசி இருந்தார்.
இதற்கு ஆளும் பாஜக தரப்பில் இருந்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கடும் எதிர்வினை ஆற்றினர். மேலும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பு எம்.பி-க்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக ராகுல் காந்தி பேசி இருந்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஜூலை 1) பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.