அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணம் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சாரானார்.

செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரை கைது செய்யபட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து விடுதலையாகி நலமுடன் இருக்க வேண்டி, அறம் மக்கள் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கரூர் மாரியம்மன் கோயிலில் இன்று காலை அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுதலை பெற வேண்டியும், நலமுடன் இருக்க வேண்டியும், கரூர், திருச்சி, சென்னை மாவட்டங்களில் அறம் மக்கள் கட்சி சார்பில் கோயில்களில் அங்கப் பிரதட்சணம், சிறப்பு பூஜை நடத்த உள்ளோம்.
இதேபோல் பிற மத வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினோம். இன்று கரூர் மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம், சிறப்பு பூஜை செய்துள்ளோம்.” என்றனர்.