ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, கடந்த 4-ஆம் தேதி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், திருமகன் ஈ.வெ.ரா-வின் தந்தையுமான EVKS இளங்கோவன் தான் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்த EVKS இளங்கோவன், ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமலின் உடலில் காங்கிரஸின் ரத்தம் தான் ஓடுகிறது என்றும் அவர் கூறியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட கமல் ஹாசன், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் கமல் ஹாசன் ரத்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், உடலில் ரத்தம் தான் ஓட வேண்டும் என்று கூறிய அவர், தேவையில்லாமல் காங்கிரஸ் ஓடக் கூடாது என்று கடுமையாக விமர்சித்தார். இந்த தேர்தலில் திமுகவின் எதிர்ப்பு அலைகள் இருக்கும் என்றும், ஆனால், அவர்கள் காசை கொடுத்து மக்களை வெல்ல முயற்சி செய்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.