சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். இவர் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவருடைய நிதி நிறுவனத்தை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
இதில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டுள்ளனர். பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிறுவனம் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சியில் வைத்து தேவநாதன் யாதவை கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.