தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ள நிலையில் குற்றால மெயின் அருவியில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஆக.22) மாலை மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது அருவியில் பகுதிக்கு மேல் உள்ள பாறை திடீரென ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழுந்ததில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிஜூ (44) ஜமால் (56), புளியங்குடி பகுதியைச் சேர்ந்த உதுமான்மைதீன் (58), அருண்குமார்(27) ஆகியோர் மீது மலையிலிருந்து வந்த பாறை விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். மேலும் அருகில் குளித்திருந்த சுற்றுலா பயணிகள் இதைக்கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதையடுத்து, மலைப்பகுதியில் இருந்து வந்த பாறைகள் ஏதேனும் மரக்கிளையில் தங்கி உள்ளதா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்து அருவிப்பகுதியில் மேலே ஏணியில் ஏறி பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் தற்காலிகமாக அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் தற்போது சீசன் களைகட்டி உள்ள நிலையில் அருவிப்பகுதியில் பாறை விழுந்து சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.