ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தென்காசி வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (34). தனியார் வாகன ஓட்டுநரான இவர், தனது மாமனாரின் பூர்வீக இடம் 3 சென்ட் நிலத்தை கிரையம் கொடுத்து, வாங்கியுள்ளார். அந்த நிலத்துக்கு தனது பெயரில் பட்டா பெற்றுள்ளார்.
பின்னர் அந்த நிலத்தில் கடைகள் கட்ட தரிசு நில சான்று பெறுவதற்காக தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். பின்னர் அந்த மனு குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, தென்காசி வருவாய் ஆய்வாளரை சந்திக்குமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டபோது, மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க கூறியுள்ளார். அதன்படி மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து பேசியுள்ளார்.
நிலைத்தை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர், அது தரிசு நிலம் என்று எழுதி, அறிக்கையை தென்காசி வருவாய் ஆய்வாளர் தர்மராஜ்க்கு அனுப்பிவிட்டதாகவும், அவரை சென்று சந்திக்குமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து, வருவாய் ஆய்வாளரை சந்தித்தபோது அவர் நேரில் நிலத்தை பார்வையிட்டு, 2 ஆண்டுக்கு அடங்கல் இருப்பதாகவும், 3 ஆண்டுக்கு அடங்கல் வாங்கி கொடுக்க சொல்லிவிட்டு, மனுவை பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சமாகவும் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.5 ஆயிரம் கொடுத்தால்தான் மனுவை பரிந்துரை செய்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்ப முடியும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரேசன் இதுகுறித்து தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் ஆய்வாளர் தர்மராஜிடம் கொடுத்துள்ளார். அவர் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதை அறிந்த டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் போலீஸார் விரைந்து சென்று, வருவாய் ஆய்வாளர் தர்மராஜை கைது செய்தனர்.
தரிசி நில சான்று பெற ரூபாய் 5000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.