நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக செய்யும் வேலையில் வெற்றிகிடைக்காவிட்டால், அந்த வேலையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரசாந்த் கிஷார் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் தேர்தல் வியூகநிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தியால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை. ஆனாலும், கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கவோ அல்லது வேறு ஒருவர் கட்சியைவழி நடத்தவோ ராகுல் அனுமதிக்கவில்லை. என்னைப் பொருத்தவரை இது ஜனநாயக விரோத செயல். எனவே, வரும் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றிகிடைக்காவிட்டால் காங்கிரஸில் இருந்து ஒதுங்கியிருப்பது பற்றி ராகுல் காந்தி பரிசீலிக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக செய்யும் வேலையில் வெற்றிகிடைக்காவிட்டால், அந்த வேலையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வேலையை வேறு ஒருவரிடம் ஒரு 5 ஆண்டுக்கு ஒப்படைக்க வேண்டும். ராகுலின் தாய் சோனியா அதைத்தான் செய்தார். 1991-ல் தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டசோனியா, நரசிம்ம ராவை பிரதமராக பொறுப்பேற்க அனுமதித்தார்.
உலகில் உள்ள நல்ல தலைவர்களின் முக்கிய பண்பு என்னவென்றால், தங்களிடம் உள்ள குறையைஅறிந்துகொண்டு அதை சரி செய்வார்கள். இவை எல்லாம் ராகுலுக்கும் தெரியும். தனக்கு உதவிதேவை என்பதை ராகுல் உணராவிட்டால் யாரும் அவருக்கு உதவமுடியாது. தான் சரி என்று நினைப்பதை செயல்படுத்தக்கூடிய ஒருவர்தனக்கு தேவை என்று அவர் விரும்புகிறார். அது சாத்தியமில்லை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த போது கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகினார். இந்தப் பணியை வேறு யாராவது செய்யட்டும் என அப்போது அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு மாறாக அவர் நடந்து கொள்கிறார்.
எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரஸும் அதன் தொண்டர்களும் பெரியவர்கள். தொடர் தோல்விகள் வந்தாலும் தன்னால் மட்டுமே கட்சிக்கு வெற்றியை தேடித் தர முடியும் என்ற கருத்தில் ராகுல் பிடிவாதமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.