ராகுல் காந்தி ஒரு போராளி, தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் நேர்மையாக பதில் அளிப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அதிருஷ்டமில்லாதவர், கொள்ளையடிப்பவர், பெரும் தொழிலதிபர்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவர் என்று பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறியாதவாது, “ராகுல் காந்தி ஒரு நேர்மையான, வலிமையான தலைவர். அவர் கண்ணியமான மற்றும் நேர்மையான பதிலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போராளி. அவர் நேர்மையானவர் என்பதால் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ராகுலின் பாட்டனார் ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி உள்ளிட்ட ராகுல் காந்தியின் குடும்பத்தினருக்கு எதிராக பாஜக பல முறை பேசியுள்ளது. ஆகையால் இப்போது ராகுல் சில விசயங்களைப் பேசும்போது மட்டும் ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜக குறைவாகவா விமர்சித்துள்ளது?” என்று தெரிவித்துள்ளார்.