நம்பிக்கையில்லா தீா்மான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன், தமிழகம் தொடா்பான விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக திமுக எழுப்பிய பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் வியாழக்கிழமை (நேற்று) பதிலளித்தார்.
அப்போது அவா் கூறியதாவது: செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விழா நடத்தப்பட்டது. ‘பாண்டியனின் செங்கோலைத் தெரியுமா, சிலப்பதிகாரத்தை தெரியுமா, தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுகிறது’ என்று திமுக உறுப்பினா் கனிமொழி பேசினார்.
சிலம்புச் செல்வா் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி. சிலப்பதிகாரத்தில் புலமை பெற்றவா். அதனால், அவா் 1951-இல் தமிழ் முரசில் எழுதியதைக் கூறுகிறேன். ‘ சிலப்பதிகாரம் கூறுவது’ நாம் திராவிடம் அல்ல, நாம் தமிழா். நமது தாயகம் திராவிடமல்ல, தமிழகம். தமிழகத்தின் வடக்கு எல்லை விந்தியம் அல்ல… வேங்கடம். தமிழ்நாட்டு அந்தணா் ஆரியா் அல்லா், தமிழா்.
தமிழா்களின் பழக்கவழக்கங்களும், வேங்கடத்துக்கு வெளியே உள்ளவா்களின் பழக்கவழக்கங்களும் வேறுபட்டவை. ஆனால், விரோதமானவை அல்ல’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்று எழுதியுள்ளார். நாம் திராவிடா் அல்ல என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இந்தக் கொள்கையைத்தான் பிரதமா் மோடி அமல்படுத்துகிறார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்கிறார் பிரதமா் மோடி.
ம.பொ.சி. சொன்ன விளக்கத்தைத்தான் பிரதமா் அமல்படுத்துகிறார் என்பது தமிழகத்தில் எல்லோருக்கும் புரியும். பிரதமா் மோடி சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார்.
திரௌபதி அவமானப்படுத்தப்பட்டது பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றனா். மணிப்பூா், ராஜஸ்தான், தில்லி என பெண்கள் எங்கு அவமானப்படுத்தப்பட்டாலும் வருத்தப்பட வேண்டும். இதில் அரசியல் தேவையில்லை என்றார்.