நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 62 நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இந்த வெற்றியால் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 2,748 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 2,748.3 புள்ளிகளுடனும் உள்ளனர்.
நெதர்லாந்து போட்டியில் தற்போது பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாளை நடைபெறும் ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார். இவர் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.