சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலின் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தையும், மகள் இறந்த சோகத்தில் உயிரிழந்தார். இதனிடையே, மாணவியை கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகனான சதீஷ், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வரும் ராமலட்சுமி என்பவரின் மகள் சத்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அவ்வப்போது சத்யாவை தொந்தரவு செய்த சதீஷை, காவல் நிலையத்தில் புகார் செய்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பிவைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக அமைதியாக இருந்த சதீஷ், நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
ஒன்றாவது நடைமேடையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சதீஷ், ஒரு கட்டத்தில் ஆத்திரத்துடன். திடீரென, தாம்பரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு மாணவி சத்யாவை பிடித்து தள்ளிவிட்டுள்ளார். இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே, சத்தியா உயிரிழந்தார்.
ஒருதலை காதலால் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என காவல்துறையில் பணிபுரியும் சத்யாவின் அத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து கடும் சோகத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவரது உயிரும் பிரிந்தது. திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு சத்யா பிறந்ததால், மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர்.
அவரும் கொலை செய்யப்பட்டதால், தந்தையும் சோகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இளைஞர் சதீஷை, இன்று அதிகாலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.