நைசாக வீட்டிற்குள் நுழைந்த பலே திருடி.. ஒரு வருடத்திற்கு பிறகு பிடித்த காவல்துறை..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. 87 வயதான இவர், தனது மனைவி குப்பம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த தம்பதி, வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுன் 3-ஆம் தேதி அன்று, நடுத்தர வயதுக் கொண்ட பெண் ஒருவர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளார்.

அப்போது, குப்பம்மாள் கண் அசந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண், பீரோவில் இருந்து 9 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு, சந்தேகம் அடைந்த ராமசாமி, வீட்டின் பீரோவை திறந்து, பரிசோதனை செய்துள்ளார்.

அதில், வீட்டில் இருந்த பொருட்கள் திருடுப்போனதை கண்டு, காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பெண்ணை தேடி வந்தனர்.

இறுதியில், அந்த பெண் பெயர் மைதிலி என்பதும், அவர் மற்றொரு திருட்டு வழக்கில், வேலூர் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், ராமசாமியின் வீட்டில், திருடியதை ஒப்புக் கொண்டார்.

இதன்பிறகு, மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், வேலூர் தனிச்சிறையில், மைதிலியை அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News