இந்தியாவின் மருந்து சீரமைப்பு குழு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்துள்ளது. இந்த தர பரிசோதனையில், 50-க்கும் மேற்பட்ட மருந்துகள் தோல்வி அடைந்துள்ளன.
குறிப்பாக, பேராசிட்டாமல், கால்சியம், விட்டமின் டி3 சப்ளிமென்ட்-கள், நீரழிவு நோய் சம்பந்தமான மருந்துகள், உயர் ரத்த அழுத்த நோய் தொடர்பான மருந்துகள், இந்த தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளது.
அதாவது, CDSCO என்ற மருந்துகளின் மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு, அதன் மாதாந்திர மருந்து எச்சரிக்கை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில், விட்டமின் சி, டி3 மாத்திரைகள், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி, பேன் – D, 500 mg கொண்ட பேராசிட்டமல் மாத்திரைகள் உள்ளிட்ட அதிக விற்பனையாகும் 53 மாத்திரைகள், இடம்பெற்றுள்ளது.
ஹெட்ரோ ட்ரக்ஸ், அல்கம் லெபோரேடரிஸ், இந்துஸ்தான் ஆண்டிபாயடிக்ஸ் லிமிடெட், கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஃபார்மாசிட்டிகல்ஸ் லிமிடெட், மெக் ஃலைப்சைன்சஸ், புயூர் மற்றும் க்யூர் ஹெல்த்கேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தான், இந்த மருந்துகளை தயாரித்துள்ளது.
இதற்கிடையே, கடுமையான பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் செபோடெம் XP 50 ட்ரை சஸ்பென்ஸன் என்ற மருந்தும், தரமற்றவை என்று இந்த தர பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. அதாவது, “தற்போது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரிகள் எதுவும் எங்களுடையது அல்ல. அவை அனைத்தும் எங்களது பெயரில் செயல்படும் போலி மருந்துகள்” என்று, மருந்துகளை தயாரித்த சில நிறுவனங்கள் கூறியுள்ளன.
கடந்த ஆகஸ்டு மாதம், மனிதர்களுக்கு ஆபத்தானது என்று கூறி 156 மருந்துகளை CDSCO அமைப்பு தடை செய்திருந்தது. இந்த மருந்துகளில், பிரபலமான காய்ச்சல் தொடர்பான மருந்துகளும், வலி நிவாரணிகளும், அலர்ஜி மருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.