12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’!

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் வெள்ளி முதல் திங்கள் வரை (மே 17-20) கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

மே 17-இல் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே-18 இல், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 19-இல் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 20-இல் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் 200 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 210 மில்லி மீட்டருக்கும் அதிமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 160, சிங்கம்புணரி (சிவகங்கை) – 140, மன்னார்குடி (திருவாரூர்) 130, மணமேல்குடி (புதுக்கோட்டை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) – தலா 110, ஆத்தூர் (சேலம்) தலா 100, மேலும் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வியாழக்கிழமை கோடை மழை பரவலாக பெய்த காரணத்தால், எந்த இடத்திலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை.

அதிகபட்சமாக ஈரோட்டில் 96.44 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மே 17 முதல் மே 20-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

மே 17 முதல் 20 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசும். இதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News