கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்படும்போது போது செந்தில் பாலாஜி திடீரென கடும் நெஞ்சு வலியால் அலறித் துடித்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 38-வது முறையாக நீட்டித்து அண்மையில் உத்தவிட்டது நீதிமன்றம். கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கைதாகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. தற்போது வரை அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.