பாதாள சாக்கடை சீரமைப்பின் போது மண் சரிந்து ஒருவர் பலி!

தஞ்சையில் பாதாள சாக்கடை சீரமைப்பின் போது மண் சரிவில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் சடலமாக மீட்டனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி பூக்காரத் தெரு லாயம் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடியது. இதனை சரி செய்ய வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டங்களும் நடைபெற்றது.

இதனையடுத்து பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. 20 அடி ஆழப்பள்ளத்தில் புதிய குழாய் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை (அக்.5) பணி முடிந்து தொழிலாளர்கள் மேலே வரும் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் தேவேந்திரன், நாராயணமூர்த்தி என்ற இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30 நிமிட இடைவெளியில் தேவேந்திரன் என்பவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மண்சரிவில் சிக்கியிருந்த நாராயண மூர்த்தியை என்ற தொழிலாளியை மீட்கும் பணியில் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை சடலமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகமாக காணப்பட்டது.

RELATED ARTICLES

Recent News