கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் அத்து மீறிய வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவ பணி செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு அங்கிருந்த வாலிபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த பெண் பயிற்சி மருத்துவர் அதிர்ச்சி அடைந்து சக நண்பர்களுக்கு சொல்லும் முன்பு அந்த வாலிபர் தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் பெண் மருத்துவரிடம் அத்துமீறி அங்கு சுற்றி திரிந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மயங்க் டல்லார் (25) என்பவரை மூன்று பிரிவுகளின் கீழ் பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் அதேபோல் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.