நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 20 பேரின் ட்விட்டர் ஐடிக்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி ஆளும் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே நாம் தமிழர் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடங்க, சென்னை காவல்துறை தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இந்நிலையில் சென்னை காவல்துறை அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடகப் பக்கங்களை முடக்க தங்கள் தரப்பிலிருந்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை; இவ்விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளது.