கடந்த மூன்று முறையாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் பாஜகவில் இணைந்தார். விஜயதாரணி கட்சி தாவியதால் அவர் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவி பறிபோனது.
பாஜகவில் இணைந்த அவர்க்கு இம்முறை கன்னியாகுமரி தொகுதி கொடுக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தன. ஆனால், மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால், விளவங்கோடு எம்.எல்.ஏ சீட் விஜயதாரணிக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.