மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும் போது தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு நிச்சயமாக விலக்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கே பணியாற்றியபோது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியை பொறுத்தவரையில் தண்ணீர் என்பது எப்போதும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் வரை இருக்கக்கூடிய தண்ணீர் பிரச்சினையை சரி செய்வதற்கு 363 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடையக்கூடிய நிலையில் இருக்கிறது.
திருச்செந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரு மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டு அதற்கு முதல்வர் ஒப்புதலும் அளித்திருக்கக்கூடிய நிலையில் மிக விரைவிலேயே அந்த திட்டமும் நிறைவேற்றி தரப்படும்.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து வின்பாஸ்ட் என்ற கார் கம்பெனியை ரூ.16,000 கோடி முதலீட்டில் தொடங்கி வைத்துள்ளார்கள். அந்த வேலையும் தொடங்கப்பட்டுள்ளது அந்த வின்பாஸ்ட் நிறுவனமும் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு தருவோம் என உறுதியை தந்திருக்கிறார்கள். அதே போல் இன்னும் பல நிறுவனங்களை தூத்துக்குடிக்கு கொண்டு வர வேண்டும், முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்போடு முதல்வர் இருக்கிறார். விரைவில் தூத்துக்குடி மறுபடியும் ஒரு புகழ்பெற்ற தொழில் நகரமாக மிளிரும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும் போது தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு நிச்சயமாக விலக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் கேள்வி கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு எதிராக கொண்டு வந்து அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் அதிமுகவினர் என்பதை எடப்பாடி மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்” என்றார்.