மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மோகன் யாதவ் என்பவர் அங்கு முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மோகன் யாதவ் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, “கட்டாய மதமாற்றத்தை எங்களது அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது. கட்டாய மதமாற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மோகன் யாதவின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் ஆரிப் மசூத் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, “முதலில், கட்டாய மதமாற்றம் என்றால் என்ன என்பதை, முதலமைச்சர் விளக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், மாநிலத்தில் இளம்பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாமை குறித்து விமர்சித்த அவர், “போபால் பகுதியிலும், இட்கேடி பகுதியில், பெண் குழந்தைகள் காணாமல் போயின. கடந்த 3 நாட்களாக, அந்த குழந்தைகளின் பெற்றோர் அவதி அடைந்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
ஆனால், அந்த பெண் குழந்தைகளையும், குற்றவாளியையும், அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்த மாதிரியான விஷயங்களில் நடவடிக்கை எடுக்க துவங்கினால், நாங்கள் அதனை வரவேற்போம். ஆனால், அதற்கு பதிலாக, இவர்கள் வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.