துணிவு சூப்பர்.. வாரிசு சூறை மொக்கை.. காரணம் என்ன? – வம்சி சறுக்கியது எங்கே?

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், கடந்த 11-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களில், அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனமும், விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமும் கிடைத்து வருகின்றன.

விஜயின் ரசிகர்களையே அந்த திரைப்படம் திருப்திபடுத்த முடியாமல், திணறி வருகிறது. அடிப்படையில் பார்க்கும்போது, வாரிசு திரைப்படம் சூறை மொக்கை என்றால், துணிவு சுமார் ரக திரைப்படம் தான். ஆனால், வாரிசை விமர்சனம் செய்தும், துணிவு படத்தை புகழ்ந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்றால், துணிவு திரைப்படம் மக்களுக்கான பிரச்சனையையும், அவர்களோடு இணைந்து பயணிக்கக் கூடிய திரைப்படமாகவும் உள்ளது.

ஆனால், வாரிசு திரைப்படம், மக்களின் வாழ்க்கையோடு துளியும் ஒட்டாத படமாக உள்ளது. இரண்டு முதலாளிகளுக்கு இடையே நடக்கும் சண்டையை பார்க்கும்போது, மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று வம்சி எப்படி யோசித்தார் என்று தான் தெரியவில்லை. இதற்கு முன்பும், பணக்கார வீட்டு இளைஞனாக விஜய் பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக, விஜயின் ப்ரியமானவளே, அவரது திரைப்பயணத்தில் திருப்பு முணையாக இருந்த திரைப்படம். ஆனால், அந்த படம், அப்போதைய குடும்ப பின்னணியையும், மக்களின் வாழ்க்கையோடு கலந்திருந்தது.

ஒரு சிலர் படம் பார்த்துவிட்டு சொல்வார்கள், “படத்துல எல்லாமே இருந்தது.. ஆனா படம் எனக்கு பிடிக்கல” . இதற்கு காரணம் என்னவென்றால், திரையில் காண்பிக்கப்படும் வாழ்க்கையோடு இணைந்து பயணிக்க முடியாத வகையில், அந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.

இதுமட்டுமின்றி, பல அரசியல் பிழைகளும், வாரிசு படத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. “இன்னொரு பெண்ணுடன் விஜயின் அண்ணன் தொடர்பில் இருக்கிறார். இதனை அறிந்து, அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து செய்ய முயல்கிறார். பின்னர், விஜய் பேசியதும், அந்த பெண் புரிந்துக் கொண்டு, ஒன்றாக இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை” என்று வசனம் பேசுகிறார். இது எந்த விஷயத்தை சொல்ல விரும்புகிறது. கணவன் எந்த தவறு செய்தாலும், அதனை ஏற்று, அந்த பெண் அவரோடு அடிமையாக வாழ வேண்டும் என்று படம் சொல்கிறதா.

மேலும், மற்றொரு காட்சியில், அடிதட்டு மக்களை கேவலமாக சித்தரிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், விஜயின் அண்ணன் மகளை ஒரு கும்பல் கடத்திவிடுகிறது. அந்த கும்பல், ஒரு அடிதட்டு மக்கள் வசிக்கும், லோக்கல் ஏரியா போல் காண்பிக்கப்படுகிறது.

அந்த ஏரியா பற்றி போலீசார் விவரிக்கும்போது, “அங்கு வசிப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அங்கு நுழைந்தால் யாரும் வெளியே வரமுடியாது.. அங்கு வசிப்பவர்கள் அனைவரும் Accused-கள்” என்ற ரேஞ்சுக்கு டயலாக் பேசுகிறார்கள். அதனையும் மீறி விஜய் உள்ளே நுழைகிறார்…

அங்கு பார்த்தால், தெரு வாசலிலேயே, சிலர் லுங்கி கட்டிக் கொண்டும், கருப்பான நிறம் கொண்டவர்களாகவும், கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு திரிபவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் புரியவில்லை?.. அந்த ஏரியாவில் வசிக்கும் மக்கள் எப்போதும் சரக்கு அடித்துக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்கிறாரா? அல்லது அவர்கள் மோசமானவர்கள் என்று சொல்கிறாரா?..

பொதுப்படைத் தன்மை செய்வது தவறு என்று காலங்காலமாக கூறி வந்தாலும், வம்சி போன்ற இயக்குநர்கள் ரொம்பவே அசால்ட்டாக செய்துவிட்டு செல்கின்றனர். இதுபோன்ற பல்வேறு அரசியல் பிழைகளையும், மக்களோடு இணைந்து பயணிக்க முடியாத பிரச்சனையையும் கொண்டிருப்பதால் தான், வாரிசு திரைப்படம் சூறை மொக்கையாக உருவாகியுள்ளது.

இவ்வாறான அரசியல் பிழைகளை, இந்த படத்தில் மட்டுமல்ல, வம்சி தன்னுடைய முந்தைய தமிழ் படமான தோழாவிலும் செய்திருப்பார்.. “திருநங்கைகளை கேலிக்கு உள்ளாக்கியது.. லோக்கல் ஏரியா என்று சொல்லப்படும் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் ரவுடியாக இருப்பது” போன்ற பல்வேறு விஷயங்களை, அந்த படத்திலும் சாதாரணமாக பேசியிருப்பார். தற்போது, விஜய் படத்தில் இவற்றை சேர்த்திருப்பதால், அது பலரது கவனத்திற்கு சென்று, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News