ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பழனிசாமி பேட்டி:-
அதிமுக ஆட்சியில் போலீசார் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாருக்கு 6 மாத காலமாக மன அழுத்தம் இருந்து வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்தில் இருந்தவருக்கு ஓய்வு கொடுத்து சிகிச்சை எடுக்க அனுமதிக்காதது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
ஏற்கனவே மன அழுத்தம் இருந்தவருக்கு பணி கொடுக்கப்பட்டதால் விபரீத முடிவு எடுத்துள்ளார். பணியிலும் மன அழுத்தம் இல்லை. குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை என்றால் தற்கொலைக்கு காரணம் என்ன?.
உயர் போலீஸ் அதிகாரி இறந்த பிறகு குற்றம் சாட்டுவது தவறானது. அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆரம்ப கட்ட பணியை அதிமுக செய்து வருகிறது. போலீஸ் பணி புனிதமான பணி. ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை. ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள ரகுபதி வசம் ஊழல் தடுப்புப் பிரிவு இருப்பதே தவறு.
கவர்னர் ஏன் டெல்லி சென்றார் என்பது பற்றி எனக்கு தெரியாது. லோக்சபா தேர்தலுக்கு தயாராக உள்ளோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயம் இல்லை. அதிமுக யாருக்கும் அடிமையில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.