மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: மதுரை முழுவதும் விழாக் கோலம்!

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக இன்று காலை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைதிருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும் , நேற்றிரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டது. மேலும் அலங்கார வளைவுகளில் பச்சரியால் அலங்கரிப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பவள கனிவாய் பெருமாளும் நேற்று மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளினார்கள்.

இதனையடுத்து காலை திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினார்கள்.

இதனை தொடர்ந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர்.

திருக்கல்யாண மேடை முழுவதும் 2 டன் அளவிற்கான பல்வேறு வகையான பூக்களை வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது.

இதேபோன்று நேற்று மாலை தொடங்கி விடிய விடிய மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற்ற நிலையில் இந்த விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த முறை ஆன்லைன் மூலமாகவும் மொய் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி்தரிசனம் செய்து விருந்து உண்டு, மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.

சொக்கநாதர் அம்மனுக்கு மாங்கல்யம் கட்டும் போது, இங்கு மண்டபத்தில் அமர்ந்துள்ள ஆயிரக்கணக்கான பெண் சுமங்கலி பக்தர்கள் தங்களது தாலியை அவிழ்த்து, புது தாலி கட்டி அம்மன் சொக்கநாதர் இருவரையும் வணங்கினர்.

தொலைக்காட்சி வாயிலாக, வெளியே காத்திருந்த பெண்களும், ஆங்காங்கு தங்களது இல்லங்களில் இருந்த சுமங்கலிப் பெண்களும் தங்களது தாலியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டு, அம்மனிடம் உருக்கமாக பிரார்த்தனையை மேற்கொண்டனர்.

விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், காவல் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அம்மன் சொக்கநாதர் திருமண வைபோகத்தில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News