குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கம்பேல். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து, தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத அவரது மனைவி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, விவாகரத்து பெற்றுள்ளார்.
இதனால் மனைவி மீது கோபம் அடைந்த ஷங்கர், அவரை பழிவாங்க முயற்சித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையின் எச்.ஐ.வி வார்டுக்கு, ஊழியர் போல் சென்ற அவர், எய்ட்ஸ் நோயாளிகளின் ரத்தத்தை, பரிசோதனைக்கு தேவை என்று கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, தனது முன்னாள் மனைவியை சந்தித்த ஷங்கர், மீண்டும் தன்னிடம் இணைந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை, மனைவிக்கு செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணிற்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷங்கர் கம்பேலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.