இந்தியில் பட இயக்க செல்லும் இன்னொரு விஜய் பட இயக்குநர்?

நடிகர் விஜயுடன் இணைந்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய 3 வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர், தற்போது இந்தியில் சல்மான் கானை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இதேபோல், விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் என்று 3 தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லியும், சமீபத்தில் ஜவான் என்ற படத்தை, இந்தியில் இயக்கியிருந்தார்.

ஷாருக்கான் நடித்திருந்த இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. இந்நிலையில், விஜயுடன் இணைந்து பணியாற்றிய இன்னொரு இயக்குநரும், பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விஜயுடன், மாஸ்டர், லியோ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம், கோடை விடுமுறையையொட்டி, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு பிறகு, இவர் இந்தியில் படம் எடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் அமீர்கான் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல், இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறு பரவி வரும் தகவல்களை வைத்து பார்க்கும்போது, கைதி 2 படம் எடுக்கப்படுவதற்கு, இன்னும் காலதாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News