பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோவிலில் பக்தர்கள் காலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர்.
திருமாலின் 9-ஆவது அவதாரமாக கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்று தினம் குழந்தைகளை கிருஷ்ணராக பாவித்து வீடுகளில் வழிபடுகின்றனர். அந்த வகையில் கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோவிலில் குழந்தை கிருஷ்ணர் தொட்டிலில் இருப்பது போன்று அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ண பக்தர்கள் விரதம் இருந்து கிருஷ்ணனை வழிபடுகின்றனர். குறிப்பாக பல மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ண பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அதேபோல், மக்கள் வீடுகளில் மாக்கோலம் போட்டு அரிசி மாவில் கிருஷ்ணன் பாதம் வைத்து வீட்டுக்கு கிருஷ்ணரை வரவேற்று வெண்ணெய், அப்பம், பொங்கல் என பல பிரசாதங்கள் படைத்து வழிபடுகின்றனர்.
இன்றைய தினம் வழிபடுவதால் மக்கள் துன்பங்களை மறந்து வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதாகவும், திருமண பாக்கியம், குழந்தை இல்லாதவர்கள் இன்று கிருஷ்ணனை வணங்குவதால் அந்த கவலைகள் எல்லாம் நீக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ணரை வணங்குவதால் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகுவதாகவும் நம்பிக்கை வைத்து வீடுகளில் பாலகிருஷ்ணனை வரவேற்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.