கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி :
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் 1000 கணக்கில் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமான கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவாரூரில் உள்ள கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கும், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. சென்னையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியும் அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகே பேரணி தொடங்கி, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது.