இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த வாரம் முதல் நடைபெற்று வந்தது. இன்று 7ஆவது நாளாக 5ஜி ஏலம் நடைபெற்றது. இன்றுடன் ஏலம் முடிவடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒட்டுமொத்தமாக 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், அதானி, வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக 5ஜி ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளதாகவும் கூறபடுகிறது.
3ஜி ஏலம், 4ஜி ஏலத்தை காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையாகியுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 3ஜி ஏலத்தில் 50,968.37 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் 4ஜி ஏலத்தில் 77,815 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது 5ஜி ஏலத்தில் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையாகியுள்ளதாக தற்காலிக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி ஏலத்தில் ஜியோ நிறுவனம் அதிக ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள். புதிய நிறுவனமான அதானி 25Mhz ஸ்பெக்ட்ரம் மட்டுமே வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இதையடுத்து இந்திய 5ஜி மார்க்கெட்டில் ஜியோ, ஏர்டெல் இடையே கடும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் 5ஜி அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.