அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். அவர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தோர்களை நிராகரிப்பவர், மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்.
நான் ஒரு அமெரிக்கர் இல்லை. நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. ஆனால் ஒன்று தெளிவாக இருக்கட்டும்: இருவரும் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட இருவரையும் ஆதரிப்பது பாவம்.
அமெரிக்கர்கள் இப்போது, இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். யார் மிகவும் குறைவான தீமை உடையவர்? அந்த பெண்மணியா அல்லது அந்த கனவானா? அது எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுக்கட்டும்” என்று போப் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைத்து அவர்களை நாடு கடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்.
கருக்கலைப்பை பெண்களுக்கான தேசிய உரிமையாக்கிய 1973 -ம் ஆண்டு சட்டத்தினை திரும்பும் மீட்டெடுப்பேன் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் அவர்களின் இந்த சூளுரையை முன்வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் மீது போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.